Pages

Saturday, August 30, 2014

புருவமத்தி என்பது புருவத்தின் மத்தியா புருவங்களின் மத்தியா என ஒரு சத் விசாரம் - Ajiesh

திருச்சிற்றம்பலம்.
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி.
முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது “மணி’ என்பது என்ன ? இதை என்ன என்று கூறுமிடத்து வள்ளலார் சொல்லுவதை பாருங்கள், “ நமது புருவமத்தியில் ஆறுபட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தி இருக்கின்றது “ என்பார்….அந்த “ஒரு மணியே” மணி மந்திர அவுடதம் என அறிந்து கொள்ளவேண்டும்….அந்த ஒரு மணியே ரெண்டு கண்ணிலும் உயிருக்கு உயிராயும் கருணை கடலாயும் கைபடா கனலாயும் ஜோதியாயும் தந்தையாயும் தாயாயும் குருவாயும் ஞானமாயும் மிளிர்கின்றது. அந்த “ஒரு மணியே குருமணி” என அறிதல் வேண்டும்….அப்படி ”ஆறு பட்டையுடன் கூடிய ஒரு மணியை” தக்க குருவின் துணை கொண்டு அறிதலே ஞான தீக்கை. . அதனை தக்க ஆசாரியன் திருவருளால் அறிந்து திறந்து கொள்ளுதலே “நடுக்கண் பூட்டை” திறத்தல்.அதுவே ஞான சாதனம். ..
இங்கு கற்றவர் உளத்தே இனிக்கும் என்பது அறியப்படவேண்டியது, கண் நுதல் கடவுள் என்பவர் உளத்தே இனிக்கும் தன்மையினர் என தெளிகிறது..ஆனால் ஊனக் கண் மணியானது உளத்தே இனிக்கும் தன்மை அற்றது. “கண் நுதல்” கடவுள் என்பதுவே அறியப்படவேண்டியது. அதுவே உளத்தே இனிக்கும் தன்மையது. ஆதலின் உளத்தே இனிக்கும் தன்மை உடைய கண்நுதல் கடவுளை அறிதல் வேண்டும். அன்றியும் “கண் மணியே ”இங்கு வள்ளலாருக்கு ஞான மணியாயும் ஞான மருந்தாயும் இருக்கின்றது. ஆதலின் “மணி” என்பது என்னவென்று புரிதல் அவசியம்.. “ மணி மந்திர அவுஷதம்” என்பர் பெரியோர். மணியானது மந்திரமாயும் மருந்தாயும் இருக்கிறது என பொருள். அதையே வள்ளலாரும் தெரிவிக்கிறார்.
பொற்சபை நடஞ்செய் புண்ணியரை கண்ணினுள் மணியாயும் ,கைபடா கனலாயும், கறைபடா மதியாயும் ,கணிப்பரும் கருணை கடலாயும் ,தெய்வமாயும் கருதி திருப்பணி புரிந்திருக்கின்றேன் என்றே வள்ளலார் பாடுகின்றார்.ஆதலின் இங்கு ஊன கண்மணியே தான் கடல் என கொள்ளுதல் தகுமோ?, அல்லது ஊன கண்மணி தான் மதியென கொள்ளுதல் தகுமோ?, அல்லது ஊன கண்மணிதான் கனலாயும் கொள்ளுதல் தகுமோ?..அப்படி கொளின் ஊன கண்மணி தான் கடல் எனவும் கொளவேண்டுமே.?ஒரு ஊன் உறுப்பு, ஊன்பொருள் எப்படி கனலாகவும் கடலாகவும் இலங்கும் என்பதை சற்று கூர்ந்து நிச்சயித்தல் நன்றல்லவா?. ஆதலின் இஃது உவமையாக கொண்டதே அன்றி ஊன கண்மணி தான் கனல் என்றோ, ஊன கண்மணி தான் கடல் என்றோ, ஊன கண்மணி தான் மதியென்றோ, ஊன கண்மணி தான் பொற்சபை என்றோ கொள்ளுவதெங்ங்னே?. இப்பாடலில் வள்ளலார் உபயோகிக்கும் வார்த்தையானது “தெய்வமே என நான் நின்னையேகருதி” என்பதாகும். அதாவது மேற்கூறியவை உவமையாகும். அதாவது,கண்ணின் மணி போலவும், கைபடாத கனல் போலவும்,கறைபடா மதி போலவும், கருணை கடல் போலவும் புனைந்துரைக்கின்றார் பெருமான் அவர்கள்.ஆதலின் “கண் நுதல் கடவுளை என்பது மேற்சொன்ன “மணி’ என் தெளிதல் நலம்.
அடுத்து மெய்ஞானம் என்ன என வினவுமிடத்து வள்லலார் கூறும் மெய்ஞானமானது “தகரமெய்ஞானம்” எனப்படும். அதை “தகர மெய்ஞான தனிப்பெரும் வெளியெனும் அகர நிலைப்பதி அருட்பெரும்ஜோதி” என்பார் அகவலில். அப்படியான தனிப்பெரும் வெளியினி விளங்கும் தனிப்பெரும் கருணையளரே அகர நிலையான அருட்பெரும் ஜோதியார்., அப்படியல்லவா?.ஆகையினால் ஊனக்கண்ணும் அதில் இருக்கும் மணியும் தனிப்பெரும் வெளியாவதெங்ங்னே என சிந்தித்தல் நன்மை பயக்கும். முன்சொன்ன ஆறுபட்டையுள்ள மணியிலங்கும் தலமே ”தகர வெளி”. அல்லாது செத்துபோகும் போது அழுகி மண்ணோடு மண்ணாகி போகும் தன்மையான ஊனகண்மணி தகர மெய்ஞானமாகாது.
அன்றியும் மெய்பொருள் என்பது பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்ட தூல பருப்பொருளக இருக்கமுடியுமா என சிந்தித்து தெளிதல் நலம். கண் என்பதும் கண் மணி என்பதும் பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டதும் மரணகாலத்தில் அழிவை தருவதும் ஆகும். ஆனால் வள்ளலார் கூறும் தகரவெளியில் விளங்கும் மணியானது பஞ்ச பூத சேர்க்கையினால் உருவாக்கபடாததும் அனாதி முதல் இருப்பதுமாகிய “உண்மை வஸ்த்து”. அதை ”ஏக வஸ்த்து” என்பர் சான்றோர். அதுவே “மணி”, கண்ணுக்கு கண்ணாகவும், உயிருக்கு உயிராகவும்,மாமருந்தாகவும் கைபடா கனலாகவும் , இன்பத்தை தரும் அமிர்தமாகவும் உள்ளது. அதையே கண்ணார் ஒளி எனவும், ஒளியின் கதிர் எனவும் சொல்லுவர்.
கதிர் என்பது கதிரவனை குறிக்கும்,அதை ஞான சூரியன் என்பார், அல்லது சிவசூரியன் என்பாருமுளர். “தினம் சூரிய கலையில் செல்லும்படி மனதை அந்த கண்களில் செலுத்தவேண்டும்” என வள்ளலார் சொல்வதை சற்று கவனிக்க அதன் உண்மை புலப்படும். அதாவது சூரிய கலையில் செல்லும்படி மனதை அந்த ”கண்களில் ” செலுத்தவேண்டுவது கடமை. சூரிய கலை என்பது ஒரு கண்ணில் அல்லவா இருப்பதாக சொல்லுகிறார்கள், அப்படியெனில் ஏன் வள்ளலார் “கண்களில்’ என பன்மையில் குறிப்பிடுகின்றார்? ரெண்டு கண்களிலும் எப்படி சூரிய கலை வரும் என நினைக்கவேண்டாமா?
”விண்ணேவிண் உருவேவிண் முதலே விண்ணுள்
வெளியேஅவ் வெளிவிளங்கு வெளியே என்றன்
கண்ணேகண் மணியேகண் ஒளியே கண்ணுட்கலந்துநின்ற கதிரே”, என்பதில் வரும் கதிரே ”அகர ” நிலைப்பதியான அருட்பெரும் ஜோதி, இதில் வரும் விண்ணே என்பது ”தகர வெளி” எனப்படும். ஆகையினால் தினமும் சூரிய கலையான “அகர’ நிலையின் பால் மனதை செலுத்தவேண்டும்.. இதுவெ வள்ளலார் கூறும் தகர மெய்ஞானம். அல்லாது யோக சாத்திர சம்பிரதாயப்படியான அகரம் என குறிப்பிடும் சூரியகலை இயங்கும் வலது கண் இல்லை என தெளிதல் நலம் அன்றோ
மேற்படி விளக்கங்களினால் நாம் புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் “ஆறு பட்டையுடன் கூடிய மணி” இலங்கும் புருவமத்தியே ஆன்ம ஸ்தானம்,ஆதலினாலே வள்ளலார் ”ஆன்மாவுக்குச் சகல விளக்கமாகிய சாக்கிர ஸ்தானம் லலாடம், ஆதலால், விசேடம் சிறந்தது லலாடத்தில் மூக்குநுனியாகிய புருவமத்தி.” என்கிறார் . புருவமத்தியை விளக்குமிடத்து “இருதயத்திற்குமேல் இரண்டரை அங்குல இடமான கண்டத்தில் மகேசுவரனும், அதற்குமேல் இரண்டரை அங்குல அண்ணாக்கில் சதாசிவமும், அதற்குமேல் இரண்டரை அங்குல உயரத்தில் புருவமத்தியில் விந்துவும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் நாதமும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் பரவிந்துவும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் பரநாதமும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் திக்கிராந்தம் அதிக்கிராந்தம் துவாதசாந்தம் முதலானவைகளும், அதீதத்தில் சுத்தசிவமு முள” என்கிறார். அதாவது புருவமத்திக்கு கீழ் ரெண்டரை அங்குலத்தில்அண்ணாக்கும், புருவமத்திக்கு மேல் ரெண்டரை அங்குலத்தில் நாதமும் இருக்கும் .புருவமத்தி விந்துஸ்தானம். அந்த விந்துஸ்தானம் அக்கினி பீடமாகவும் அதன் மேல் ஆன்மாவும் விளங்கும். இதுவே “மணியாடும் மன்று” அல்லவா?.அப்படியெனில் கண்டிப்பாக இந்த புருவமத்திக்கு ரெண்டரை அங்குலத்திற்க்கு மேல் நாதஸ்தானம் வரவேண்டும், அப்படி வராத எந்த ஒருஇடமும் புருவமத்தி என சொல்லக்கூடது, ஏற்கவும் கூடாது அல்லவா?.
மேலும் , சோம சூரி யாக்கினி பிரம விஷ்ணுக்கள் இருக்குமிடம்: நேத்திரம் புருவமத்தி, அண்ணா, பிரமரந்திரம் என்றும் வள்ளலார் புருவமத்தியை குறிப்பிடுகின்றார் அல்லவா?...அதை விளக்கமாக பார்ப்போம். முதலில் மேலிருந்து கீழாக முதலில்பிரம்மரந்திரத்தில் யார் இருக்கிறார்கள் என பார்ப்போம். பிரம்மரந்திரத்தில் விஷ்ணு இருக்கிறார் என சொல்கிறார்., அடுத்து அண்ணாவில் பிரம்மாவும், அதற்க்கு கீழ் புருவமத்தியில் அக்கினியும், நேத்திரம் என்பதில் சோமசூரியனும் இருக்கிறார்கள். அப்படித்தானே? ரெண்டு கண்களிலும் சோம சூரியன் இருவரும், புருவமத்தியில் அக்கினியும் இருப்பதாகத்தானே சொல்கிறார்?..அப்படி அக்கினி இருக்கும் புருவமத்தியே ஆன்மஸ்தானமாகிய ”மணியாடும் மன்று” எனப்படும் சிற்சபை.. இதற்க்கு ஆதாரமாக வள்ளலார் சொல்லுவதை பார்ப்போமா? அதாவது நெற்றியில் ரோமம் தோன்றியும் தோன்றாமலும் இருக்கிறதல்லவா? அது ஏன் என சொல்லும்கிறார் ,” இவை அல்லாது மற்ற இடங்களில் தோன்றுவது தத்துவக் கெடுதி. தத்துவங்களின் உட்புற மலங்களே வாயுவின் பிருதிவி. ஆதலால், மேற்குறித்த இடங்களில் அக்கினியின் காரிய மில்லாததினால் உரோமம் உண்டாகின்றது. அக்கினி காரியப்பட்ட இடங்களில் தோன்றியும் தோன்றாமல் அருகியிருக்கின்றது.
நெற்றியில் தோன்றா திருப்பது மேற்படி இடத்தில் ஆன்ம விளக்கம் விசேஷ முள்ளது. அதைப் பற்றி மேற்படி இடத்திற்கு விந்துஸ்தானம் என்றும், அறிவிடம் என்றும், லலாடம் என்றும், முச்சுடரிடம் என்றும், முச்சந்திமூலம் என்றும், நெற்றிக்கண் என்றும், மஹாமேரு என்றும் புருவமத்தி என்றும், சித்சபா அங்கம் என்றும் பெயர். ஆதலால், விந்து என்பதே ஆன்மா. விந்துவின் பீடம் அக்கினி. இந்த இரண்டினது காரியமே பிரகாசமாகிய அறிவின் விளக்கம் ஆதலால், உரோமம் அருகி யிருக்கின்றது.’ ‘ இதிலிருந்து நாம் தீர்க்கமாக புரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் புருவமத்தி என சொல்லப்படுகிற இடத்தினில் அக்கினியின் காரியத்தினால் ”ரோமம் தோன்றியும் தோன்றாமலும் அருகி இருக்கும்”. அப்படி ரோம அருகி இருக்கும் இடமே புருவமத்தி எனப்படும் விந்துஸ்தானமாகிய நெற்றிக்கண் என்ற சித்சபா அங்கமாகும் மஹாமேருவாகிய லலாடம்.

தகரவெளி சிற்றம்பலவாணர் துணை.

No comments: