Pages

Saturday, August 30, 2014

சத்விசாரத்தினால் உஷ்ணம் உண்டு பண்ணுவது எப்படி?? - Ajiesh

இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண் டிராதீர்கள். இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகிற - பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் - வரையில், நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எது வென்றால்: நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது - வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் - அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்.

அவ்விசாரம் பரம் அபரம் என்று இரண்டு வகையா யிருக்கின்றது இவற்றிற் பரம் பரலோக விசாரம், அபரம் இகலோக விசாரம். இவ்விரண்டில் இகலோக விசாரம் விசார மல்ல. சாதாரணமாக ஒருவன் விசாரம் செய்து கொண்டிருக்கின்றானேயென்றால், அவ்விசாரம் விசாரமாகாது, உண்மை விசாரமுமல்ல. ஏனெனில்: விசார மென்கின்றதற்குப் பொருள்: வி-சாரம் என்பதில் வி சாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது; அது மேலும் பரலோக விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது. ஜலத்திலிருக்கின்ற பாசியை நீக்குவதுபோல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது. அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டுபண்ணுவதற்குத் தெரியாது. அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம் மலை மழை முதலியவற்றிற்குப் போய், நூறு ஆயிரம் முதலிய வருஷ காலம் தவஞ்செய்து, இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள். இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் - இதைவிடக் - கோடிப்பங்கு, பத்து கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம். எவ்வாறெனில்: ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்.

அந்த விசாரம் செய்வது எப்படியென்றால்: அண்டத்தில் சூரியன் சந்திரன் நக்ஷத்திரங்கள் - இவைகள் எப்படிப்பட்டன? இவைகளினுடைய சொரூப ரூப சுபாவம் என்ன? இவை முதலான அண்ட விசாரமும், பிண்டத்தில் நாம் யார்? இத் தேகத்தின் கண் புருவம் கைம்மூலம் - இவைகளிலும் இவை போன்ற மற்ற இடங்களிலும் உரோமம் உண்டாவானேன்? நெற்றி முதலான இடங்களில் அது தோன்றாதிருப்பதென்ன? கால் கைகளிலுள்ள விரல்களில் நகம் முளைத்தலும் அந் நகம் வளர்தலும் - இவை போன்ற மற்றத் தத்துவங்களினது சொரூப ரூப சுபாவங்களும் என்ன வென்னும் பிண்ட விசாரமுஞ் செய்து கொண்டிருங்கள்.

இங்கு வள்ளலார் அண்ட விசாரத்தையும் பிண்ட விசாரத்தையும் சொல்லுகிறார் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில் இப்படி அண்ட விசாரமும் பிண்ட விசாரமும் மட்டும் செய்து கொண்டிருப்பில் ஆன்மாவை தெரியவொட்டாமல் மறைத்திருக்கின்ற அனந்த திரைகள் விலகுமா என கேட்டுப்பாருன்கள்.....பதிலாக தோன்றுவது முடியாது என்பதே. ஆதலினாலே வள்ளல் பெருமானார் வேலாயுத முதலியாரிடம் சத் விசாரத்தினை கேட்டு தெளிவு பெற சொல்லுகிறார்.

இவற்றில் அண்ட விசாரமும் பிண்ட விசாரமும் பர விசாரமாகுமா என்பது ஆரய்வது அவசியம். இவை சத் விசாரத்தின் கீழ்நிலை விசாரமேயாம்., அல்லது உலக விசாரமேயாம். அப்படியெனில் நாம் விசாரிக்கவேண்டிய பரநிலை விசாரிப்பு எவ்வண்ணமானது என்பதை வள்ளலாரும் குறிக்கவில்லை, வேலாயுத முதலியாரும் விளக்கவில்லை அல்லவா?....ஆதலினால் அந்த ரகசியமான சத்விசாரத்தை நாம் எவ்வண்ணமேனும் அறிந்து கொள்ளுதல் நலமன்றோ?.

சன்மார்க்கிகளின் லட்சிய ஸ்தானம் என்பது “பெரு வெளி’ என்பது திண்ணம். நாம் அடையவேண்டியதும் அறிந்து கொள்ளவேண்டியதும் பெருவெளியேயாகும். அதையே வள்ளலாரும் “இவ்வண்ணம் அண்ட விசாரமும் பிண்டவிசாரமும் செய்து கொண்டிருக்க அறிய வேண்டியதை அறிந்து கொள்ளலாம்” என்கிறார்...அதாவது நாம் அறிந்து கொள்ளவேண்டிய “உண்மை” என்பது பெருவெளி என்பது தான்.

பெருவெளி என்பது என்ன என சத் விசாரம் பண்ணுவதே பரவிசாரத்தின் உண்மை நோக்கம். ஆதலினால் அந்த “தகர மெய்ஞான தனிப்பெரு வெளியெனும் அகர நிலைப்பதி அருட்பெரும் ஜோதி” என்ன என்பதை சத் விசாரம் பண்ணக்கடவோம்.... அதுவல்லவா உண்மை பர விசாரிப்பான சத் விசாரம்?...அதுவல்லவா நமக்கு பர இன்பத்தை வழங்கும் தன்மையது?...அதனால் அல்லவா ஆன்மாவுக்கு உஷ்ணம் பெருகும்?....ஆனால்........எப்படி உஷ்ணம் பெருகும்?

தகர நிலை என்ன என்பதும் அதனுள் விளங்கும் அகர நிலை என்ன என்பதும் இப்போதைக்கு சத் விசாரம் பண்ணுவோம்...காலம் கனியட்டும் , விளங்க வேண்டியது உண்மையாக விளங்கும் வள்ளல் குரு பிரானின் ஆசியுடன்.

No comments: