Pages

Saturday, August 30, 2014

அருட்பெரும் ஜோதி ஆண்டவர் என்பவர் யார்? - Ajiesh

வடலூர் வள்ளல்பிரானால் வெளிப்பெடுத்த பெற்ற ஜோதி ஆண்டவரை யார் என்று நாம் அறிந்து கொள்ளுதல் நல்லது தானே அன்பானவர்களே?. தற்போது எங்கு பார்க்கினும் சன்மார்க்கிகள் என்பவர்கள் ஜோதி வழிபாடினை கொண்டிருப்பதை நம் காணலாம். வடலூரிலும் இதே முறைப்படி ஜோதி தரிசனம் காட்டப்பட்டு ஆராதனை செய்யப்பட்டு வருவது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் வள்ளலார் வழிமுறை தானா இது எனவினவுங்கால் சந்தேகமே மிஞ்சுகின்றது. ஏனெனில் அருட்பெரும் ஜோதியார் என்பவர் இவ்வண்ணம் விளங்குபவர் அல்லர் என்பதே வள்ளலார் கூறும் உண்மை மொழி.

இதோ அவர் கூற்று, படித்து தெளிவு பெறுங்கள்.

நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். "தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?" என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை.

இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது.

சமயந்தவிர மதங்களில் உள்ள வேதாந்தி சித்தாந்தி யென்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மை யறியாது, சமயவாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள். ஆதலால் நீங்கள் அஃது ஒன்றையும் நம்பவேண்டாம் எவைகளிலும் தெய்வத்தைப் புறமுகமாகப் புலப்படச் சொல்லவில்லை. ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.

மேலும், சமய மதங்களில் தெய்வத்தினது உண்மையைக் குழூஉக்குறியால் குறித்து, அக்குறிப்பையும் வெளிப்படையாகக் காட்டாது சிவாயநம என்றும், நமசிவாய என்றும், இது போன்ற அனந்த வர்ணங்களைச் சேர்த்து, ஒன்று இரண்டு மூன்று ஐந்து ஆறு எட்டு பத்து பதின்மூன்று பதினைந்து பதினாறு இருபத்துநான்கு முதலிய சங்கையில் மந்திரங்களாய் அமைத்து வழங்கி வருவிக்கவிட்டு நடந்து வருகின்றது. அவ்வவ் மந்திரங்களின் அர்த்தம் பலவாக விரியும் ஆதலால்.... நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்மலாபமாகிய சிவானுபவமேயன்றி வேறில்லை.

இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை - தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை - எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம், எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த - உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன். நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்: நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி

என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை.

மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.

முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.

இங்கு மஹாமந்திரத்திற்க்கு பொருள் சொல்லும் போது அதை “வாச்சியார்த்தம்” என வள்ளலார் சொல்லுகின்றார், அதாவது மஹா மந்திரத்தின் உண்மை பொருள் விளக்கமே அது. இதையே சித்தர்களும் முன் உள்ள ஞானிகளும் மறைத்து விட்டதாக வள்ளலார் சொல்லுகிறார்.அந்த உண்மை தான் என்ன என அறியும் போதே அருட்பெரும் ஜோதி ஆண்டவர் என்பவர் யார் என நமக்கு விளங்க ஆரம்பிக்கும். அதனை பார்ப்போம்.

மஹாமந்திரமான,’அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி’ எனும் வாக்கியத்தின் பொருளாக வள்ளலார் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் “பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம்“ என்பதாகும். சற்று கவனித்து பார்க்கில் இது புலப்பெடும்.

இங்கு மஹாமந்திரத்தின் பொருள் என்பதில் எங்குமே’ ஜோதி ’என சொல்லப்படவில்லை என்பதை கவனிக்கவும். அருட்பெரும் ஜோதி என்பதனை வள்ளலார் ”பேரறிவு” என்றே விளக்கம் தருகிறார். அப்படித்தானே?.அப்படி பார்க்கும் போது இப்படி ’ஒப்பற்ற பெரும் தயவை உடைய பேரறிவே ’ அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை என்பது புலப்படுகிறதல்லவா? இதை தான் சித்தர்களும் ஞானிகளும் மண்ணை போட்டு உண்மை தெரியவொட்டாமல் மறைத்து விட்டதாக வள்ளல் பெருமான் சாடுகிறார். ஆதலினால் அன்பார்ந்த சன்மார்க்க அன்பர்களே நீங்களும் “உண்மை” கடவுளான “பேரறிவினை” வணங்கி வழிபடுங்கள்.அதை விடுத்து ஒரு விளக்கினை வழிபடுவது சன்மார்க்கமல்ல என்பது வள்ளல் கழலிணை தொட்டு விளம்புகிறேன்.நன்றி வணக்கம்.



No comments: